Time: 1:06 PM

பேராவூரணி -இடையாத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி  சுற்றுச் சுவர் அமைப்பதை தடுக்கும் ஆளும் கட்சி பிரமுகர் பொதுமக்கள் குற்றச்சாட்டு 

பேராவூரணிஆக.21–
இடையாத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிக்கு, சுற்றுச்சுவர் எழுப்ப விடாமல் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் இடையூறு செய்வதாகவும், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை முடித்துத் தர வேண்டும் என கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். 

கிராம பொதுமக்கள், பள்ளி வளர்ச்சிக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு, அன்னையர் குழு, இளைஞர் மன்றம் சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெ.முத்துச்சாமி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, 

தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) கடந்த 80 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதற்கு சொந்தமான இடத்தில், தொடக்கத்தில் ஆசிரியர் குடியிருப்பும், பள்ளியும் ஒன்றாக இருந்தது. தற்போது நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், ரூபாய் 13 லட்சம் மதிப்பீட்டில் 210 மீட்டர் சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட நிலையில் தற்போது 100 மீட்டர் அளவிற்கு மட்டுமே சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 

2016-ல் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் ரூ 10 லட்சம் மதிப்பில், புதிய கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இடத்தின் அருகே பள்ளிக்குச் சொந்தமான இடத்திற்கு, மேற்கு பகுதியில் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர், பள்ளிக்கு சொந்தமான சுமார் 10 சென்ட் இடத்தில் ஒரு ஓட்டு வீட்டையும் கொட்டையையும் அமைத்துள்ளார்.
அந்த இடம் தொடக்கத்தில் குழந்தைகள் நல மையமாகவும், ஆசிரியர் குடியிருப்பும் இருந்த இடமாகும். தற்போது அங்கன்வாடி சுவர் பழுதடைந்துள்ளது. 

இதேபோல் ஒருவர் கொட்டகை அமைத்தும், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் பள்ளி இடத்தில் குடிநீர் குழாய் பதித்து தென்னந்தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறார். கிழக்குப் பகுதியும் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரி முதல் கோட்டாட்சியர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மற்றும் இடையாத்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, பலமுறை பள்ளி நிர்வாகம் நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும் பிரச்சினைகளை தெரிவித்த நிலையில் இது நாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

ஆளும் கட்சிப் பிரமுகர் தலையீட்டால் அலுவலர்கள் முறையாக செயல்பட தயங்குகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் தாங்கள் வருவாய்த்துறை மூலம் குறிப்பிட்ட இடத்தை அளந்து, ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுச்சுவர் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். அந்த இடம் பதிவுத்துறை மற்றும் வருவாய் துறை ஆவணங்களில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெயரில் உள்ளது என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. 

மனுவின் நகல் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.