Time: 10:40 AM

அதிராம்பட்டினம் அருகே பழுதடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை

அதிராம்பட்டினம் அருகில்  தம்பிக்கோட்டை மறவக்காடு பகுதியில் உள்ள பாட்டு வனாச்சி பாலம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இது துவரங்குறிச்சி இணைப்புச் சாலை என்பதால் இந்த வழியில் செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் இந்தப் பாலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்களும் அதிக அளவில் இந்தப் பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் பாலம் மிகவும் பழுதுபட்ட நிலையில் உள்ளதால் பல முறை அதிகாரிகளிடத்தில் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை பாலம் சீரமைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் இருந்து வருகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வரை பழுதுபட்ட பாலத்தின் நிலையை எண்ணி பெற்றோர்கள் அச்சத்துடனேயே இருந்து வரும் நிலை உள்ளது. இதுபற்றி மறவக்காடு பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவகுமார் கூறுகையில் இந்தப் பாலம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே லேசாக பழுது படத் துவங்கியது இதையடுத்து  பாலத்தை சீரமைக்க நாங்கள் அப்போதே கோரிக்கை வைத்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இருந்தும் விடாமுயற்சியாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ள வேஇல்லை. இந்நிலையில்  தற்போது பாலம் மேலும் அதிக அளவில் பழுதுபட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதிலும் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாலத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ள சூழலில் அந்தப் பாலத்திலேயே வாகனங்கள் தற்போது செல்ல வேண்டியுள்ளதால் பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது. எனவே உடனடியாக இந்தப் பாலத்தை சீரமைத்து உயிர்ப்பலி ஏற்பாடாமல் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.