Time: 7:32 AM

ஆஸ்திரேலியாவில் 71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி – நாளை தொடக்கம்

கோல்டுகோஸ்ட்:

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நாளை (4-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை அரங்கேறுகிறது.

இந்த 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. பெண்கள் ரக்பி, பீச் வாலிபால் ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஜமைக்கா, நைஜீரியா, கனடா, ஸ்காட்லாந்து, தென்ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை உள்பட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த இருக்கிறார்கள்.

இதில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 474 வீரர்-வீராங்கனைகளாக களம் இறக்குகிறது. இந்த போட்டியை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே பெரும்பாலும் பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை அலங்கரித்து வருகிறது. இந்திய அணி சமீபகாலங்களில் காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.

17-வது முறையாக இந்த போட்டியில் களம் காண இருக்கும் இந்தியா இதுவரை 155 தங்கம் உள்பட 438 பதக்கங்கள் வென்று 4-வது இடத்தில் உள்ளது. 2002-ம் ஆண்டில் 69 பதக்கமும், 2006-ம் ஆண்டில் 50 பதக்கமும், 2010-ம் ஆண்டில் (டெல்லி) அதிகபட்சமாக 101 பதக்கமும், 2014-ம் ஆண்டில் (கிளாஸ்கோ) 64 பதக்கமும் இந்தியா வென்று அசத்தி இருக்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் 219 வீரர்-வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். 14 விளையாட்டுகளில் களம் இறங்க காத்து இருக்கும் இந்திய அணியினர் வழக்கம் போல் துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்தம் ஆகியவற்றில் அதிக பதக்கங்களை வெல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குத்துச்சண்டையில் விகாஸ் கிருஷ்ணன், மனோஜ்குமார், 5 முறை உலக சாம்பியன் மேரிகோம், பிங்கி ராணி, சரிதா தேவி, பளுதூக்குதலில் கடந்த முறை தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ், மீரா பாய் சானு, துப்பாக்கி சுடுதலில் ஜிதுராய், ககன் நரங், ஜூனியர் உலக கோப்பை போட்டியில் சாதனை படைத்த மனு பாகெர், மல்யுத்தத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சுஷில்குமார், சாக்‌ஷி மாலிக், இறகுப்பந்தில் (பேட்மிண்டன்) சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் ஆசிய போட்டியில் சாதனை படைத்த நீரஜ் சோப்ரா ஆகியோர் பதக்கம் வெல்வார்கள் என்று அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இறகுப்பந்து போட்டியில் சீனா, ஜப்பான் வீரர்-வீராங்கனைகளின் சவாலை சந்திக்க வேண்டியது இல்லை என்பதால் இந்தியர்களுக்கு பதக்கம் வெல்வதில் அதிக சிரமம் இருக்காது.

ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணிக்கு, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா கடும் சவாலாக இருக்கும். எனவே இந்திய அணியின் தங்கப்பதக்கம் கனவு நிறைவேறுவதில் நிச்சயம் சிக்கல் இருக்கும். இந்திய பெண்கள் அணி பதக்கம் வெல்வது என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்தது எனலாம். ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா-தீபிகா பலிக்கல் ஜோடி மீண்டும் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கத்தை வெல்ல வாய்ப்பு உள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணிக்கு இறகுப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து தலைமை தாங்கி தேசிய கொடியேந்தி செல்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு ஆக்கி வீரர் மார்க் நோலஸ் தலைமை தாங்கி கொடியேந்தி அணிவகுக்க இருக்கிறார். தினசரி போட்டிகள் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த போட்டியை சோனி சிக்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெறுவது இது 5-வது முறையாகும். ஏற்கனவே 1938 (சிட்னி), 1962 (பெர்த்), 1982 (பிரிஸ்பேன்), 2006 (மெல்போர்ன்) ஆகிய ஆண்டுகளில் இங்கு நடந்து இருக்கிறது. இந்த போட்டியின் மூலம் அதிகமுறை காமன்வெல்த் போட்டியை நடத்திய நாடு என்ற பெருமையை ஆஸ்திரேலிய பெற இருக்கிறது. கனடா 4 முறை இந்த போட்டியை நடத்தி உள்ளது.

Comments are closed.