Time: 3:35 PM

பேராவூரணியில் 
உறவினர் வீட்டுக்கு வந்த திருநெல்வேலி பெண்ணுக்கு கொரோனா… 
தஞ்சை மருத்துவமனையில் அனுமதி

பேராவூரணி ஜூலை.06-
பேராவூரணியில் உறவினர் வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு, கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அந்தப் பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பேரூராட்சி அதிகாரிகள் சுகாதாரப் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் 60 வயதுடைய நபருக்கு, புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கான சிகிச்சை பெற மனைவி, மகனுடன் தஞ்சாவூர் வந்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக,  அவருக்கும், மனைவி, மகனுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளனர். 

இதையடுத்து, தஞ்சையில் இருந்து பேராவூரணி வந்த அவர்கள், எஸ்.என்.வி திருமண மண்டபம் அருகே உள்ள உறவினர் வீட்டில் வந்து தங்கி உள்ளனர். இந்நிலையில் குருவிக்கரம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் சளிப்பரிசோதனை செய்யப்பட்டதில், புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் மனைவியான 56 வயது பெண்ணுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக திங்கள்கிழமை காலை 108 ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அந்தப்பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து, அப்பகுதியில் பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் கே.தமிழ்வாணன் மேற்பார்வையில், இளநிலை உதவியாளர் ராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் வீரமணி, பேரூராட்சி அலுவலர்கள் யோ.சார்லஸ், செல்வகுமார், தன்னார்வ தொண்டர் வி. உதயகுமார் அப்பகுதியில் முகாமிட்டு, ப்ளீச்சிங் பவுடர் தூவினர்.