Time: 7:42 AM

அதிராம்பட்டினம் கரையூர் தெரு கடற்கரைச் சாலை சீரமைப்பு பணி-பேரூராட்சிகள் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு

அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கரையூர் தெரு, காந்திநகர் மற்றும் ஆறுமுகம் கிட்டங்கி தெரு ஆகிய பகுதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் துறைமுக சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்து. இதனால் மீனவர்கள் துறைமுகத்திற்கு செல்லவும் துறைமுகத்திலிருந்து மீண்டும் திரும்பவும் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இதனால் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து உடனடியாக இந்த சாலையை சீரமைக்க  நிதி ஒதுக்கப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலை மாரியம்மன் கோவில் ஆர்ச் முதல் கடற்கரை வரை  செல்லும் இரண்டரை கிலோமீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மாகின் அபுபக்கர் இந்தப் பணிகளை திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகிலுள்ள வளம் மீட்பு பூங்காவை ஆய்வு மேற்கொண்டார். இதுதடர்பான விளக்கங்களை பேரூராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.இதில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேலு மற்றும் உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.