Time: 7:32 PM

மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில்
கடைமடை பகுதிகளில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?
விவசாயிகள் எதிர்பார்ப்பு

சேதுபாவாசத்திரம்,மே.29

மேட்டூர் அணை பாசனத்துக்கு திறக்கப்படும் நிலையில் கடைமடை பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டுதான் ஒரு போக சம்பா சாகுபடி நடந்தது. தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி அணை திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் தண்ணீர் வராமல் மோசமாக இருந்த பாசன வாய்க்கால்கள் கடந்த ஆண்டும் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் மிகவும் மோசமான நிலையில் உள்ள பாசன வாய்க்கால்கள் சம்பா சாகுபடிக்குமுன் தூர்வாரப்பட வேண்டும். கடந்த ஆண்டு மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடைவரை வந்து சேரவில்லை. பருவமழை முறையாக பெய்ததால் சம்பா சாகுபடி முழுமை பெற்றது. தற்போது வாய்க்கால்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

கடைமடை பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு கடைமடை வரை தண்ணீர் வராததால் குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், வீரியங்கோட்டை, மரக்காவலசை போன்ற பகுதிகள் வழியாக செல்லக்கூடிய 5-ம் நம்பர், 6-ம் நம்பர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் முழுமையாக தூர்ந்துள்ளது.

தற்போது மேட்டூர்அணை திறக்கப்பட உள்ள சூழ்நிலையில் அணை திறக்கப்பட்டாலும் கடைமடை பகுதியில் வாய்க்கால்கள் உள்ள மோசமான நிலையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைப்பது எட்டாக்கனியாக இருக்கும்.

சம்பா சாகுபடிக்கு முன்பு கடைமடை பகுதி பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர், கடைமடை பகுதிக்கு தனிக்கவனம் செலுத்தி பாசன வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கடைமடை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.