Time: 7:21 PM

மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியில் விசைப்படகு மராமத்து பணிகள் தீவிரம்

மல்லிப்பட்டினம்,மே.29

சேதுபாவாசத்திரம் பகுதியில் விசைப்படகு மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மீன்பிடி தடைக்காலம் குறைக்கப்பட்டு வருகிற 1-ந் தேதி மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

விசைப்படகுகளை மராமத்து பார்க்கும் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கால் தளவாட சாமான்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் படகுகளை பழுதுநீக்கம் செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவு ஆவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜுதீன் கூறியதாவது

பல நாட்கள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை மீண்டும் கடலுக்கு எடுத்து செல்லும் முன்பாக பழுது நீக்கி மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சாதாரணமாக ஒரு விசைப்படகை கரையில் ஏற்றி சுத்தம் செய்து, குறிப்பிட்ட சில பழுதுகளை மட்டும் நீக்கி, வர்ணம் பூசி கடலுக்கு எடுத்து செல்வதற்கு மட்டும் குறைந்த பட்சம் ரூ.4 லட்சம் வரை செலவாகிறது.

புதுப்படகின் விலை ரூ.20 முதல் ரூ.40 லட்சம் வரை உள்ளது. தற்போது விலைவாசிகளுக்கு ஏற்ப ஆசாரி தினக்கூலி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை உள்ளது. 1 கன அடி பலகை ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. இணைப்புக்கட்டை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,500 வரை விற்கப்படுகிறது.

மட்டி அடித்து பைபர் தடவுவதற்கு ரூ.2 லட்சமும், வர்ணம் பூச ரூ.50 ஆயிரமும் தேவைப்படுகிறது. முழு திருப்திகரமாக படகுகளை மராமத்து பார்ப்பதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகும். நலிந்து வரும் மீன்பிடி தொழிலை பாதுகாக்க தடைக்காலங்களில் மராமத்து பணிகளுக்காக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.