Time: 7:42 AM

தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணம் வழங்கப்படுமா? மீனவர்கள் எதிர்பார்ப்பு

அதிராம்பட்டினம்,மே.26-

ஊரடங்கு கால நிவாரணம் வழங்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஊரடங்கு முடியும் முன்பே மீன்பிடி தடைகாலமும் அமல்படுத்தப்பட்டு விட்டது. ஊரடங்கில் தற்போது சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.

மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் மீன்பிடி தொழிலுக்கு மட்டும் தளர்வுகள் கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஊரடங்கு மற்றும் தடைக்காலத்தால் 2 மாதங்களுக்கு மேலாக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.

விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அரசு கண்டுகொள்ளவில்லை என கவலை தெரிவித்துள்ள மீனவர்கள், ஊரடங்கு கால நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடைக்காலத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பல்வேறு தொழில் துறையை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி வரும் நிலையில் விசைப்படகு மீனவர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணம் வழங்கவில்லை. வழக்கமாக வழங்கக்கூடிய தடைக்கால நிவாரணம் மட்டுமே வழங்கி உள்ளனர். எனவே மீனவர்களுக்கும் ஊரடங்கு கால நிவாரணம் வழங்க வேண்டும்.

மிகப்பெரிய அன்னிய செலாவணியை ஈட்ட கூடியதும், மிகப்பெரிய வேலை வாய்ப்பினை கொடுக்க கூடியதும், மக்களுக்கு அதிகம் புரத உணவை கொடுக்கக்கூடிய விசைப்படகு மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டிருப்பது மீனவர்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கி உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி உள்ளோம்.

ஆனால் அரசு எந்தவித முடிவுகளையும் அறிவிக்காமல் உள்ளது. விசைப்படகுகளை பழுது பார்க்க லேத், வெல்டிங் பட்டறைகளை திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தளர்வுகளை அறிவித்து விசைப்படகு மீனவர்களை விரைவாக தொழிலுக்கு அனுப்புவதற்கு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.