Time: 5:13 AM

ரமலான் மாதத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
துபாய் அரசு வெளியீடு

துபாய், ஏப்.24 கொரோனா’ வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ரமலான் மாதம் தொடங்குவதால் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை துபாய் அரசு வெளியிட்டுள்ளது.

கடும் கட்டுபாடுகள்

அமீரகத்தில் ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் அமீரகம் முழுவதும் ‘கொரோனா’ வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி துபாயில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அவை பின்வருமாறு:-

* குழுவாக இணைந்து தொழுகை நடத்த அனுமதி கிடையாது.

* நோன்பு திறக்கும் மற்றும் சகர் நேரங்களில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ஒன்றாக கூட வேண்டும். எனினும் 10 பேருக்கும் அதிகமானவர்கள் ஒன்றாக கூடுவதற்கு அனுமதி கிடையாது.

உணவு வழங்க தடை

* உணவுப் பொருட்களை நேரடியாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய அனுமதி கிடையாது. அவ்வாறு உணவுப்பொருட்களை வழங்குவோர் இஸ்லாமிய விவகாரத்துறையின் அனுமதி பெற்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலம் மட்டுமே உணவுகளை வழங்க வேண்டும்.

* தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் நன்கொடைகளை கொடுக்க வேண்டும்.

* வெவ்வேறு வீடுகளில் வசிப்பவா்கள் உணவுகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* முதியோா், ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும்.

* அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். அவ்வாறு வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசங்களை அணிய வேண்டும்.

அரசு விதிமுறைகளுக்கு…

* வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் உடனடியாக கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.

* அரசு போக்குவரத்து மற்றும் சொந்த வாகனங்களில் சென்றால் கைகளை சானிடைசர் மூலம் சுத்தப்படுத்த வேண்டும். இதற்காக வாகனங்களில் சானிடைசர்களை எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும்.

* உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்க்க செல்லுதல், வெளிப்புற நடவடிக்கைகளில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது