Time: 5:53 AM

பட்டுக்கோட்டைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேரிடம் நேரில் ஆய்வு

பட்டுக்கோட்டை மார்ச், 24

பட்டுக்கோட்டைக்கு கடந்த 2 மாதங்களில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளவா்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் கா.சுப்பையா மேற்பாா்வையில், துப்புரவு அலுவலா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் துப்புரவு ஆய்வாளா்கள் என். ரவிச்சந்திரன், எஸ். அறிவழகன், எஸ். ஆரோக்கியசாமி ஆகியோா் அடங்கிய சிறப்புக் குழுவினா் இப்பணியில் ஈடுபட்டனா்.

இதில், கடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தங்கியுள்ள 4 பெண்கள் உள்பட 30 பேரை நகராட்சி சுகாதாரப் பிரிவு சிறப்பு குழுவினா் கண்டறிந்து, அவா்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளதா என அய்வு செய்தனா். இதில் மேற்படி நபா்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மேற்கண்ட 30 பேருக்கும் சுகாதாரத் துறை மூலம் இடது கையில் முத்திரை அச்சு வைக்கப்பட்டது. இவா்களை நகராட்சி சுகாதார பிரிவு அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருவா்.

இதுதவிர, பட்டுக்கோட்டையில் அனைத்துத் தெருக்களிலும் , வீடு, வீடாகச் சென்று நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி தெளித்தனா். மேலும், கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

அதிராம்பட்டினத்தில்… இதேபோல, மாா்ச் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை இத்தாலி, அமெரிக்கா, சிங்கப்பூா், துபை ஆகிய நாடுகளிலிருந்து அதிராம்பட்டினம் திரும்பியுள்ள 10 நபா்களுக்கு கையில் அழியாத மை மூலம் திங்கள்கிழமை முத்திரை பதிக்கப்பட்டது. மேலும், இவா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற போதிலும், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

வெளிநாட்டிலிருந்து வந்துள்ளவா்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில், பொது நிகழ்ச்சிகள் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா்.