Time: 4:26 PM

அதிராம்பட்டினத்தில் மன்னர் காலத்தில் கொடிகட்டி பறந்த குதிரை வணிகம் – நீண்ட வருடங்களாக தடைபட்டிருந்த நிலையில் மீண்டும் புத்துயிர் பெறுமா?

அதிராம்பட்டினம் ஜனவரி 29


 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் 21 வார்டுகள் கொண்ட பேரூராட்சி.இந்தப் பகுதி அதிவீரராமபாண்டியன் 400 வருடங்களுக்கு முன்னர் ஆண்ட பகுதி ஆகும். அதிவீரராமபாண்டியன் ஆட்சி செய்ததால் அதிவீரராமபாண்டியர் பட்டணம்என்ற பெயர் சூட்டப்பட்டு நாளடைவில் அது அதிராம்பட்டினம் ஆக மாறியது. அதிராம்பட்டினம் மன்னர் காலத்திலிருந்தே குதிரை வணிகம் துவங்கியது.அது மேலும் வளர்ச்சியடைந்து நாளடைவில் குதிரைச்சந்தை அமைக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு குதிரைகளை ஏற்றுமதி செய்யவும் வளைகுடா நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்யவும் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் அதிராம்பட்டினத்திற்கு குதிரை வணிகம் செய்ய வந்தனர். இந்த குதிரைச்சந்தை இருந்ததால் குதிரைகளை கடல்வழியாக கொண்டு செல்லவும் பல்வேறு நாடுகளிலிருந்து வாங்கப்படும் குதிரைகளை கடல்வழியாக கொண்டு வரவும் அதிராம்பட்டினத்தில் கப்பல் துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு குதிரை வணிகத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மேலும் ஆங்கிலேயர் காலத்திலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாளடைவில் மன்னர்கள் ஆட்சி நிறைவு பெற்று மக்கள் ஆட்சி வந்த பிறகுகார் உள்ளிட்ட வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தபிறகு  குதிரைகளின் பயன்பாடு குறைந்தது. இதைஅடுத்து நாளடைவில் அதிராம்பட்டினத்தில் உள்ள குதிரைச்சந்தை மூடப்பட்டு முற்றிலுமாக குதிரை வணிகம் முடங்கிப் போனது.குதிரைகளை பொறுத்தவரையில் தற்போது பந்தய குதிரைகள் மற்றும் மார்வாடி குதிரைகள் என இரண்டு வகை குதிரைகள் தமிழ் நாட்டில் உள்ளன.இதில் மார்வாடி குதிரைகள் அதிக விலை போகக் கூடிய தாகும் குறைந்தது பத்து லட்சத்தில் இருந்து அதிகபட்சம் ஒரு கோடி வரை இதன் விலை இருக்கும். இந்நிலையில் பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மீண்டும் அதிராம்பட்டினத்தில் தற்போதைய இளைய தலைமுறையினர் குதிரையின் மீது ஆர்வம் கொண்டு பஞ்சாப், ராஜஸ்தான்  உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை போகக் கூடிய மார்வாடி வகையைச் சேர்ந்த குதிரைகளை விலைக்கு வாங்கி கொண்டுவந்து  அதிராம்பட்டினத்தில் குதிரைப் பண்ணை அமைத்து அந்தக் குதிரைகளை தமிழ்நாட்டில் உள்ள மற்ற பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.இதனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கொடிகட்டிப் பறந்த குதிரை வணிகம் மீண்டும் புத்துயிர் பெற தற்போது உள்ள இளைய தலைமுறையினர் மூலம் வாய்ப்பு இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.