Time: 4:21 PM

அதிராம்பட்டினம் அருகே நிவாரணத் தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்

அதிராம்பட்டினம் ஜனவரி 29.


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிக்கொல்லைக்காடு மற்றும் முடுக்குக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கஜா புயல் பாதிப்பில் அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது தொடர்பாக இந்த மக்கள்  மாவட்ட ஆட்சியர் இடத்திலும் மற்றும் விஏஓ இடத்திலும் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.இந்நிலையில் நீண்ட காலமாகவே அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி  பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பழஞ்சூர் கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு விஏஓ இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில்நிவாரண தொகை பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள் பட்டியலை உயரதிகாரிகள் இடத்தில் சமர்ப்பித்து அதன்படி நிவாரணத் தொகையை வழங்க ஏற்பாடு செய்யப்படும் மற்றபடி நிவாரணத் தொகை வழங்க தகுதியற்றவர்கள் மனுக்கள் நிராகரிக்கப்படும் என விஏஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட சமரச பேச்சில் உடன்பாடு எட்டப்படவே முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.