Time: 6:51 AM

அதிராம்பட்டினத்தில் குப்பைக் கிடங்காக மாறும் கிழக்குக் கடற்கரைச் சாலை- சாலையில் கொட்டப்படும் கழிவுகளால்  தொற்று நோய் பரவும் அபாயம்

அதிராம்பட்டினம் டிசம்பர் 24

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதிராம்பட்டினம் நகர் பகுதியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் மகிழங்கோட்டை பிரிவு சாலைக்கு அருகில் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.இதில் மீன் கழிவுகள், கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் என அனைத்து கழிவுகளும் சாலையோரங்களில் கொட்டப்பட்டு கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த கழிவுகளைத் தின்பதற்காக நாய்கள் மற்றும் பறவைகள் வந்து அதை தின்பதோடு மட்டுமல்லாமல் சாலை மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கழிவுகளை கொண்டு போய் விட்டு விடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது.மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்து வரும் நிலையில் வாகனங்களை ஓட்டி வரும் ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல் பேருந்துகளில் வரும் பயணிகள் இந்த இடத்திற்கு வரும் போது துர்நாற்றம் தாங்க முடியாமல் முகத்தை மூடிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கழிவுகள் எங்கிருந்து வருகிறது, யார் வந்து கொட்டுகிறார்கள் என்பதுகூட இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இரவு நேரங்களில் வந்து கொட்டி விட்டுச் செல்வதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக இந்த கழிவுகளை அகற்றவும் சாலையோரங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.