Time: 12:14 AM

அதிராம்பட்டினத்தில் நெற்பயிர்களில் யானைக்கொம்பன் நோய்-  விவசாயிகள் அச்சம்

அதிராம்பட்டினம் டிசம்பர் 9

தஞ்சை மாவட்டம்அதிராம்பட்டினம் பகுதியில் நெல் பயிர்களில் யானைக்கொம்பன் நோய் பாதிப்பு உள்ளதால் விவசாயிகள் அச்சமும் கவலையும் அடைந்துள்ளனர்.அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான நிலத்தடி வயல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது . இந்தப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பகட்ட பணிகளை துவங்கி தற்போது கதிர் வரும் தருவாயில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த பயிர்களை யானைக்கொம்பன் நோய் தாக்கி உள்ளது. இதை அடுத்து இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த யானைக்கொம்பன் நோய் தாக்கினால் கதிர் வராது என்று கூறப் படுவதால்ஒரு மாத காலமாக உழைத்த உழைப்பும்,செலவு செய்த பணத்தையும் தற்போது இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் இந்த பகுதியை சேர்ந்த சிறு-குறு விவசாயிகள் இருந்து வருகின்றனர். இதுபற்றி யாதவர் தெருவைச் சேர்ந்த ஜெயம் என்ற பெண் விவசாயி கூறுகையில் எங்கள் பகுதியில் இந்த வருடம் மழை பெய்து வருவதால் இரண்டு வருடத்திற்கு பின்னர் இந்த வருடம்தான் விவசாயம் செய்ய முற்பட்டோம். இதற்கென கடன் வாங்கியும் ஆடு மாடுகளை விற்றும் கடந்த ஒரு மாத காலமாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தற்போதுகதிர் வரும் தருவாயில் இந்த யானைக்கொம்பன் நோய் தாக்கியுள்ளது எங்களுக்கு மிகுந்த கவலையாக உள்ளது இந்த நோய்த் தொற்று ஏற்பட்டால் கதிர் வராது என்று கூறுகின்றனர். இதனால் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம் என்றார்.