Time: 4:01 PM

பேராவூரணியில் வெளிநாட்டினரையும் கவர்ந்த விதைப்பந்து  புதுமனை புகுவிழா

பேராவூரணி டிச,08-

தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.டி.டி.வெங்கடேசன். இவர் புது வீடு கட்டி குடி புகுந்தார்.
இவரது இல்ல புதுமனை புகுவிழாவிற்கு வந்த அனைவருக்கும் சணல் பையில் வைத்து தாம்பூலப்பை வழங்கினார். அதை வாங்கிச் சென்று வீட்டில் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
உள்ளே அழகாக பேக் செய்யப்பட்டிருந்த சிறிய அட்டைப் பெட்டியில் ஐந்தாறு மண் உருண்டைகள் இருந்தன. பின்னர் தான் அனைவருக்கும் புரிந்தது. வழக்கமாக தேங்காய், வாழைப்பழம் அல்லது மிட்டாய் வழங்குவதற்குப் பதில், விருந்தினர்களுக்கு அன்பளிப்பாக விதைப்பந்து வழங்கியது.
இதுகுறித்து எஸ்.டி.டி.வெங்கடேசன் கூறியதாவது, மருத்துவம் படித்து வரும் என் மகன் வெ.துரைஅரசன், தகவல் தொழில் நுட்பம் படித்து வரும் வெ.கோவிந்தராஜ் ஆகியோர் ஆலோசனைப்படி, விருந்தினர்களுக்கு விதைப்பந்து வழங்க முடிவு செய்தோம்.
கஜா புயலுக்கு முன்னர் சோலை வனமாக காட்சி அளித்த எங்கள் பகுதி, லட்சக்கணக்கான மரங்களை புயலால் இழந்து வெறிச்சோடிக் காணப்படுகிறது. இழந்த பசுமையை மீட்டெடுக்கவும், மழைக்கு காரணமான மரங்களை வளர்க்கவும் எங்களால் முடிந்த சிறு பங்காக விதைப்பந்து வழங்கினோம்.
தற்போது பருவமழைக் காலமாக இருப்பதால் வீசப்படும் விதைப்பந்துகள் நன்கு துளிர்த்து வளரும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவரும் இதனை வரவேற்றனர்” என்றார்.
அன்பளிப்பாக வழங்கிய விதைப்பந்து பாக்கெட்டில், அதில் என்ன வகையான விதைகள் உள்ளன. எங்கெங்கு அவற்றை, எவ்வாறு நடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேம்பு, மூங்கில், பூவரசு, புளி உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களின் விதைகள், விதைப்பந்தில் இருந்தன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைப்பந்துகள் வழங்கப்பட்டது. வித்தியாசமான இந்த முயற்சிக்கு, இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த விருந்தினர்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல விதைப்பந்துகளை கேட்டுப் பெற்றுச் சென்றது குறிப்பிடத்தக்கது.