Time: 4:18 PM

பேராவூரணி அருகே அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் வைத்துக் கொள்ள வேண்டி பள்ளி அதிகாரிக்கு கோரிக்கை மனு.

பேராவூரணி டிசO7: தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பாங்கிரான்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் எப்போதும்போல் அங்கன்வாடி குழந்தைகளை படிக்க அனுமதிக்க வேண்டி பொது மக்கள் சார்பில் சமூக ஆர்வலர் ஆர்.ரெத்தினம் பள்ளி அதிகாரிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது , எங்கள் ஊரில்அரசுபள்ளி 1995 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பள்ளியின் வளாகத்தில் அங்கன்வாடி மையம் இல்லை. இந்த கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ.தூரத்தில் நெல்லியடிக்காடு கிராமத்தில் தான் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. எங்கள் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர்களால் 3 கி.மீ தூரம் நடந்து சென்று குழந்தைகளை விடுவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருமே கூலி வேலை செய்பவர்களே. எங்களால் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு பொருளாதார வசதியில்லை. கடந்த 24 ஆண்டுகளாக 3 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை தலைமை ஆசிரியர் மூலமாக பள்ளி அதிகாரிகளின் வாய்மொழி அனுமதியுடன் இப்பள்ளிக்கு அனுப்பு வந்துள்ளோம். தற்போது பள்ளி அதிகாரி எங்கள் பள்ளியை பார்வையிட்டு அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் வைத்துக் கொள்ள கூடாது என்று கூறியதன் பேரில் தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் குழந்தைகளை பள்ளியில் விட வேண்டாம் என்று கூறுகிறார். எங்கள் குழந்தைகளின் கல்வி நலன் கருதியும், பெற்றோர்களால் 3. கி.மீ தூரம் அழைத்து சென்று குழந்தைகளை அங்கன்வாடியில் விட முடியாத நிலையை கருத்தில் கொண்டும் அங்கன்வாடி குழந்தைகளை பள்ளியில் விடுவதற்கு அனுமதி தருமாறும் அல்லது எங்கள் ஊரில் அங்கன்வாடி பள்ளி அமைத்து தந்து குழந்தைகளின் கஷ்டம் போக்க வேண்டுமாய் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் அவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.