Time: 6:11 PM

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அரை கிலோமீட்டர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

அதிராம்பட்டினம்

 தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில்  இரண்டு தினங்களாக கடலில் அதிவேக சூறைக்காற்றும் அலைகள் அதிக அளவு உயரத்தில்  எழுந்து வந்தன. இதனால் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தனர். இந்நிலையில்   நேற்று முன்தினம் இரவு காற்று குறைந்து காணப்பட்டதால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என்று எண்ணிய மீனவர்கள் நேற்று காலை 5 மணி அளவில் கடலில் மீன் பிடிக்கச் செல்வதற்காக துறைமுகம் வந்தனர். அப்பொழுது கடலில் துறைமுக வாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தண்ணீரின்றி நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். துறைமுக வாய்க்காலில் எந்த நேரமும் ஐந்து அடிக்கு குறையாமல் தண்ணீர் இருக்கும் ஆனால்   இன்று தண்ணீரே இல்லாமல் இருப்பது கண்டு அதிர்ந்த மீனவர்கள் கடலில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்று எண்ணி கடலுக்குச் சென்று பார்த்தபோது கடலில் கரையிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் கடல் உள்வாங்கி கடல் தண்ணீர் இல்லாமல் வெறும் தரையை போல் காட்சியளித்தது. இதையடுத்து கடலுக்குச் செல்ல தயாராய் இருந்த மீனவர்கள்  கடலுக்குச் செல்லாமல் வீடு திரும்பினர். இது இப்பகுதி மீனவர்கள் மற்றும் கரையோரம் வாழும் பொதுமக்கள் இடையே பதட்டத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் புயல் காலங்களில் இது போன்ற நிகழ்வு நடைபெறும் இப்படி இருக்கையில் தற்போது இந்தக் காலங்களில் இதுபோன்று கடல் அதிக அளவு தூரம் உள்வாங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பொதுமக்கள் வியப்படைகின்றனர். இதையடுத்து அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் கரையூர் தெரு காந்தி ஆறுமுககிட்டாங்கித் தெரு ஆகிய பகுதியிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை  இதுபற்றி ஏரிப்புறக்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள்     கூறுகையில் நேற்று இரவு முதல் கடலில் காற்று ஏதும் இல்லாமல் அலைகளும் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது. இதனால் நேற்று காலையில் நாங்கள் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று எண்ணி கடலுக்கு வந்து பார்த்தபோது கடல் கடுமையாக உள்வாங்கி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதனால் கடலில் ஏதோ மாற்றம்  நிகழ்ந்து  உள்ளது என்று பயந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் திரும்பி விட்டோம். இரண்டு தினங்களாக கடலில் அதிவேக சூறை காற்று வீசி வந்ததால் கடலுக்குச் செல்லாமல் இருந்து வந்தோம். தற்போது காற்று ஏதும் இல்லாமல் இருந்தும் கடல் உள்வாங்கி இருந்ததால் கடலுக்குச் செல்ல அச்சமடைந்து வீடு திரும்பி விட்டோம் என்றனர்.