Time: 11:17 PM

அதிராம்பட்டினத்தில் நீண்ட நாட்களாக அகற்றப்படாத கழிவுநீரால் தொடர் காய்ச்சலில் பொதுமக்கள் அவதி

அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான மாரியம்மன் கோயில் ஆர்ச் அருகில் உள்ள தெருவில் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு பல நாட்களாக கழிவு நீர் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசிவந்தது.இந்த நிலையில் இப்பகுதியில் உள்ளவர்கள் சில நாட்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையாமல் இங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காய்ச்சலில் அவதிப்பட்டு வருகின்றனர். இது பற்றி கரையூர் தெரு கிராம முன்னாள் தலைவர் ஆறுமுகம் கூறுகையில் எங்கள் பகுதியில் குப்பைக் கழிவுகளும், கழிவு நீரும் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இது பற்றி புகார் தெரிவித்தும் இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த கழிவு நீரில் துர்நாற்றம் வீசி வந்த நிலையில் தற்போது எங்கள் பகுதியில் உள்ள சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இது நாள் வரை குணமாகாமல் தொடர் காய்ச்சலாக இருந்து வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பட விளக்கம்:
நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் தொற்று நோய் பரவக் காரணமாக இருக்கும் கழிவு நீர்.