Time: 6:53 AM

அதிராம்பட்டினம் அருகே பறவைகளை பாதுகாக்க 15 வருடங்களாக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

Adiraivanavil.

அதிராம்பட்டினம் அருகில் உள்ள பரக்கலக் கோட்டை கிராமம் என்றால் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்கு தெரியும். இந்த கிராமம் அந்தளவுக்கு பெயர் பெற்றதற்குக் காரணம் பல்வேறு சிறப்பம்சம் கொண்ட மிகப் பிரசித்தி பெற்ற  பொதுஆவுடையார் கோயில் இந்த பரக்கலக் கோட்டையில் இருப்பது தான். இந்தக் கோயில் வாரம் ஒருமுறை அதாவது திங்கள்கிழமை மட்டும் அதுவும் இரவு 12 மணிக்குத் தான் கோயில் திறக்கப்படும். மேலும் வருடத்தில் ஒருநாள் தைத்திருநாளான பொங்கல் அன்று மட்டும் நாள் முழுதும் நடை திறந்திருக்கும். இந்தக் காலங்களில் இங்கு வந்து சாமியை தரிசித்தால் வேண்டியது நடக்கும் கேட்பது கிடைக்கும் என்ற வலுவான நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளதால் இந்த காலங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம் வந்தபடி இருக்கும். இவ்வளவு புகழ் வாய்ந்த இந்தக் கோயிலின் மூலமாக பரக் கலக்கோட்டை கிராமமும் பெருமை பெற்றது. இந்தக் கோயிலின் புனிதத்தை காக்கும் வகையில் இவ்வூர் பொதுமக்களும் ஆன்மீக நெறிகளை பின்பற்றி வருகின்றனர். இப்படி பொது ஆவுடையார் கோயிலின் மூலமாக பெருமை பெற்ற பரக் கலக்கோட்டை கிராமம் மற்றொரு வகையிலும் பெயர் பெற்று வருகிறது. பொதுவாக தென்னை, நெல் என இயற்கை வளங்களுடன் பசுமையாக காட்சியளித்து வரும் பரக் கலக்கோட்டை கிராமம் ஒரு குட்டி பறவைகள் சரணாலயமாக மாறி வருகிறது. அதுவும் ஒரு ஆலமரத்தில் அத்தனை கிளைகள் மற்றும் அடர்ந்த கொடிகளில் எக்கச் செக்கமான வவ்வால்கள் தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது அத்தனை வவ்வால்களும் இலைகளைப் போலத்தான் தெரியும். இந்த வவ்வால்களின் மேல் கொண்ட அதீத பற்றால் இந்த கிராமத்து மக்கள் இதனை சாமியாகவே நினைத்து வழிபடத் துவங்கினர்.இந்நிலையில் இந்த வவ்வால்கள் மற்றும் இங்கு காணப்படும் பறவைகளை பாதுகாக்கும் வகையில் கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று கூடி தீபாவளி மட்டுமல்லாமல் வேறு எந்த காரணத்திற்காகவும் பட்டாசு வெடிப்பதில்லை என்று முடிவு செய்து இதையே கடந்த 15 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர். இது பற்றி மறவக்காடு பாலு என்பவர் கூறுகையில் பொதுவாக பரக்கலக் கோட்டை கிராமம் ஆன்மீக ஸ்தளமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் இவ்வூர் மக்கள் இயற்கையையும், பறவைகளையும் பாதுகாக்கும் சமூக உணர்வு உள்ளவர்களாகவும் இருப்பதால் எங்களைப் போன்ற பக்கத்து ஊர்களைச் சேர்ந்த மக்களிடம் நல்ல மதிப்பு உள்ளது இதைப் பார்த்து மற்ற கிராமத்து மக்களுக்கும் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி வருகிறது என்றார்.