Time: 4:44 PM

அதிராம்பட்டினம்  கடற்கரையில் புத்தர் சிலை – இதைக் காணபார்வையாளர்கள் வருகை அதிகரிப்பு

அதிராம்பட்டினம்  கடற்கரையில் புத்தர் சிலை – இதைக் காணபார்வையாளர்கள் வருகை அதிகரிப்பு

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் அருகில் உள்ள இராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியான கீழத்தோட்டம் கடற்கரையில் தீடீரென புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானதையடுத்து சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர். மாளியக்காடு, மகிழங்கோட்டை வழியாக வரும் காட்டாற்று நீர் இராஜா மடம் வந்து கீழத் தோட்டம் பகுதியில் கடலில் கலக்கிறது. காட்டாற்று நீரும் கடல் நீரும் கலக்கும் இடமான இந்தப் பகுதி இயற்கை அழகுடன் அலையாத்தி மரங்கள் அணிவகுத்தபடி ஆங்காங்கே மணல் திட்டுக்களுடன் அமைந்த நிலையில் ஒரு சின்ன அழகான தீவு போல காட்சியளிக்கும். இதையடுத்து இதைக்கண்டு ரசிக்க தினந்தோறும் பார்வையாளர்கள் இங்கு வந்து படகு மூலம் இப்பகுதிக்குச் சென்று மணல் திட்டில் சில மணி நேரம் தங்கிபொழுதைக் கழித்து விட்டு செல்வதுண்டு. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் காட்டாறும் கடலும் ஒன்று சேரும் இடத்தில் ஒரு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியதையடுத்து பார்வையாளர்களின் வருகை வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகி விட்டது.புதுமணத் தம்பதிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இந்த சிலையைக் காண ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சிலை தண்ணீருக்குள் சுமார் 8 அடியும்  தண்ணீருக்கு வெளியில் சுமார் 12 அடியும், அகலம் 7 அடியும் கொண்டதாக இருக்கிறது.  இந்த திடீர் புத்தர் சிலை இங்கு எப்படி வந்தது என்று அப்பகுதியில் உள்ளவர்களிடத்தில் விசாரிக்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பகுதியில் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் அப்போது இங்கு ஒரு பாடல் சீன் எடுப்பதற்காக இந்த புத்தர் சிலை  அமைக்கப்பட்டதாகவும், ஷூட்டிங்கிற்காக இச்சிலை அமைக்கப்பட்டாலும் இது பார்ப்பதற்கு அழகாகவும் பக்தியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் இந்த சிலையை நாங்கள் அப்படியே வைத்து விட்டோம் என்றனர்.