Time: 8:50 PM

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் 500 கிலோ எடையிலான மீனவர்கள்  வலையில் சிக்கிய கடல் பசு மீட்பு

Adiraivanavil,நவ.2 – அதிராம்பட்டினம் அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 500 கிலோ எடையிலான கடல் பசுவை மீட்டு, அது உரிய சிகிச்சைக்கு பின் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த கிழதோட்டம் கடல் பகுதியில் நேற்றுமுன்தினம் நாட்டு படகு மீனவர்கள் விரித்த வலையில் கடல் பசு சிக்கியது. இதை அறியாத மீனவர்கள் வலையை கரைக்கு இழுத்து வந்த போது தான் கடல் பசு சிக்கியது தெரிந்தது. இது குறித்து மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வன காப்பாளர் குருசாமி, வன சரக அலுவலகர் மோகன் விரைந்து வந்து மீனவர்கள் உதவியுடன் கடல் பசுவை மீட்டனர். இதையடுத்து இந்திய வனவிலங்கு நிறுவன அதிகாரிகள் மது மகேஷ்,ரூக்மணி சேகர், கடல்சார் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் பாலாஜி கடல் பசுக்கு சிகிச்சை அளித்து, பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டனர்.
இது குறித்து மன்னார் வளைகுடா வன உயிரின காப்பாளர் குருசாமி கூறியதாவது: அரிய வகை மீன் இனமாக கருதப்படும் கடல் பசு மீனவர்கள் வலையில் சிக்கியது. வலையில் சிக்கிய அரிய வகை கடல் பசு சுமார் 500 கிலோ எடை கொண்ட பெண் கடல் பசுவாகும். 6 நிமிடத்திற்கு ஒரு முறை கடலின் மேற்பரப்பில் வந்து மூச்சுவிட்டு பின் கடலுக்குள் செல்லும் தன்மையுடையது கடல் பசு.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200க்கும் குறைவான கடல் பசுக்களே வாழ்கின்றன.இவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கவும், கடல் பசுக்களின் உணவான கடல் புற்களை வளர்க்கவும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘கடல் பசுக்களின் நண்பர்கள்’ என்ற தன்னார்வ இளைஞர் அமைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,’ என்றார்.