Time: 8:21 PM

அதிராம்பட்டினம் அருகே பொதுப்பணித்துறை பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர் வாரக் கோரிக்கை

அதிராம்பட்டினம்; 28

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கல்லணைக் கால்வாயிலிருந்து வரும் வாய்க்கால் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் பெரிய வாய்க்கால்களை இயந்திரம் மூலம் தூர் வாரவும் சிறிய மற்றும் கிளை வாய்க்கால்களை நூறு நாள் திட்டத்தின் மூலம் தூர் வாரவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வாய்க்கால்கள் தூர் வாரும் பணி நடைபெற்று வந்தது. ஈச்சங்கோட்டையிலிருந்து இராஜாமடம் வரை உள்ள வாய்க்கால் இரா ஜாமடம் தாய்வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்காலில் காவிரி நீர் திறந்துவிடப்படும் நேரத்தில் அதாவது இன்னும் ஐந்தாறு நாட்களில் தண்ணீர் இந்த வாய்க்காலுக்கு வந்து விடும் என்ற சூழ்நிலையில் இதுவரை வாய்க்கால் தூர் வாரப்படாமல் செடிகொடிகள் நிறைந்தும் குப்பைகள் தேங்கியும் கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் வருவதில் காலதாமதம் ஏற்படுவதோடு வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் பட்டுக்கோட்டை ,அதிராம்பட்டினம் கடைமடைப் பகுதி என்பதால் இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்களை நிரப்ப அவகாசம் தேவைப்படும் என்பதால் வாய்க்காலில் தண்ணீர் தங்கு தடையின்றி வர வாய்க்காலை தூர் வாரினால் தான் சாத்தியமாகும் என கடைமடைப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது பற்றி நீர் பாசனக் கமிட்டி நிர்வாகி புதுக்கோட்டை உள்ளூர் வெங்கடாஜலம் கூறுகையில் எங்கள் பகுதிகடைமடை என்பதால் தண்ணீர் வழக்கமாக தாமதமாகத்தான் வந்து சேரும் அதிலும் தற்போது வாய்க்கால் நெடுகிலும் செடி கொடி நிறைந்து காணப்படுகிது. இதனால் தண்ணீர் வருவது தடைபடும். இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏரி குளங்களில் தண்ணீர் நிரப்ப இயலாது. அதற்குள் காவிரி நீர் வருவது நின்று விடும் எனவே போர்க்கால அடிப்படையில் இயந்திரங்களைக் கொண்டு வாய்க்கால்களை தூர் வார நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இல்லை எனில் கடந்த வருடங்கள் போல தற்போதும் முழுமையான விவசாயம் செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும் என்றார்.