Time: 7:52 AM

நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் முடிந்தது

புதுடில்லி: இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் நேற்று இரவு 11.54 மணிக்கு துவங்கி இன்று அதிகாலை 3.49 மணிக்கு முடிந்தது. இதனை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப் பாதையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது வந்து விழும். இதன் காரணமாக தான் சந்திரக் கிரகணம் தோன்றுகிறது. பெரும்பாலான நேரங்களில் சந்திரன் சரியான நேர் கோட்டில் வராததால் முழுமையான சந்திரகிரகணம் நிகழாது. ஆனால் இந்த முறை சந்திரன், பூமி, மற்றும் சூரியன் எல்லாம் ஒரே கோட்டில் சந்திக்க இருப்பதால், முழு சந்திரகிரகணம் நிகழ உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (ஜூலை 27) இரவு 11.54 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம், இன்று அதிகாலை 1 மணிக்கு முழு சந்திரகிரகணமாக மாறி, 2.43 மணி வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடைந்தது. இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் கண்டு ரசித்தனர். இதுபோன்ற அடுத்து முழு சந்திரகிரகணம், வரும் 2029-ம் ஆண்டு, ஜூலை 25ஆம் தேதி தான் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த சந்திரகிரகணம் தெரிய இருப்பதால் புகைப்படக்கார்கள் தங்களுடைய கேமராவில் சந்திரகிரகணத்தை படம்பிடித்தனர். இவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களுடைய ஸ்மார்ட் மொபைல் போனில் சந்திரனை படம் பிடித்தனர்.