Time: 1:50 PM

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை சுமந்து சென்ற உறவினர்கள்

திகம்கர், :மத்திய பிரதேச மாநிலத்தில், கனமழை, வெள்ளத்தின் நடுவில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால், உறவினர்கள், அவரை கட்டிலில் வைத்து, தோளில் சுமந்து சென்றனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.இந்நிலையில், திகம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, அவசரகால ஆம்புலன்ஸ் சேவை பிரிவுக்கு, பெண்ணின் உறவினர்கள் தகவல் அளித்தனர்.ஆனால், வெள்ளம் காரணமாக, ஆம்புலன்ஸ் வரவில்லை. இதையடுத்து, பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை, ஒரு கட்டிலில் படுக்க வைத்து, அவரது உறவினர்கள் தோளில் சுமந்து, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.