Time: 8:01 AM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு இலங்கை கடற்படை அட்டூழியம்

சேதுபாவாசத்திரம்,ஜூலை 25,

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, தரங்கம்பாடி, குண்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, பழையாறு, வாணகிரி உள்பட கடற்கரை கிராமங்கள் உள்ளன. நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைபிடித்து செல்கிறார்கள். தற்போது நாகை மாவட்ட மீனவர்கள் தஞ்சை மாவட்ட மீனவர்களின் நாட்டுப்படகுகளை வாடகைக்கு எடுத்து சென்று கடலில் மீன்பிடித்து வருகிறார்கள்.

இதன்படி தஞ்சை மாவட்டம் கள்ளிவயல்தோட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த செய்புல்லா என்பவரது படகை நாகை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பகுதியை சேர்ந்த நாராயணன்(வயது45) என்பவர் வாடகைக்கு எடுத்தார். இந்த படகில் நாராயணன், அவருடைய மகன் சக்திதாசன்(19), நாகூரை சேர்ந்த ஆயுள்பதி(45), கோடியக்கரையை சேர்ந்த கண்ணதாசன் (50) ஆகிய 4 பேர் தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்க சென்றனர். இதைப்போல கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த அப்துல்வகாப்(50) என்பவரது நாட்டுப்படகை தரங்கம்பாடியை சேர்ந்த மாதேஷ்(19) என்பவர் வாடகைக்கு எடுத்து இந்த படகில் மாதேஷ், பிரவீண்குமார்(30), பாலகிருஷ்ணன்(45) ஆகிய 3 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

ஆழ்கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து கப்பலில் துப்பாக்கிகளுடன் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மாவட்ட மீனவர்கள் 7 பேரையும் சுற்றி வளைத்து தாக்கினர். பின்னர் அவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 2 படகுகளுடன் சிறைபிடித்து சென்று காங்கேசன்துறை அருகேயுள்ள காரைநகர் பகுதிக்கு சென்றனர். பின்னர் நாகை மாவட்ட மீனவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்டதை அறிந்த அவர்களது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தஞ்சை மாவட்ட கடலோர பகுதியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை கடற்படையால் சிறைபிடித்து செல்லப்பட்ட நாகை மாவட்ட மீனவர்களை மீட்க மத்திய– மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.