Time: 12:23 PM

பேராவூரணி அருகே கயறு தொழிற்சாலையில் தீ விபத்து

பேராவூரணி அருகே கயறு தொழிற்சாலையில் வியாழக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணியை அடுத்த மாவடுகுறிச்சி மேற்கு தென்னங்குடி உக்கடை பகுதியில், தென்னை மட்டையில் இருந்து கயறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதை இப்பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வருகிறார்.

தென்னங்குடியை அடுத்த ஆத்தாளூரில் திருவிழா நடந்து வருவதால்  தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் இல்லாததால் கயறு தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தொழிற்சாலையில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவியது.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில்,  பேராவூரணி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனாலும், தொழிற்சாலை முழுவதுமாக தீயில் எரிந்து சேதமானது.  தீவிபத்தில் தளவாடப் பொருள்கள், இயந்திரங்கள் என ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி வட்டாட்சியர் எல். பாஸ்கரன் சம்பவ இடத்தை பார்வையிட்டு,  விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.