Time: 7:52 AM

பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரத்தில்பண்ணைக் குட்டை அமைக்க 100 சதவீத மானியம்

பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் பண்ணைக் குட்டைகள் அமைப்பதற்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: பண்ணைக் குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும், சிக்கனமாகவும், விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அமைப்பாகவும் விளங்குவதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, காவிரி டெல்டா கடைமடை விவசாயிகள் மற்றும் கடலோரப் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10,000 பண்ணைக் குட்டைகளை ரூ. 100 கோடி செலவில் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டாரங்களில் 250 பண்ணைக் குட்டைகள் 100 சதவீத மானியத்தில் ரூ. 2.50 கோடி மதிப்பில் விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்பட உள்ளன. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன் பெற ஆர்வமுள்ள விவசாயிகள் பட்டுக்கோட்டையில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04373-222816 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயனடையலாம்.