Time: 7:40 AM

இன்று “ஜிஎஸ்டி’ தினம்: புதிய வரி நடைமுறை அமலாகி ஓராண்டு நிறைவடைந்தது

சரக்கு – சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் அமல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 1) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, இந்த நாளானது ஜிஎஸ்டி தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், இணையமைச்சர் சிவபிரதாப் சுக்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதைத் தவிர நாட்டின் வேறு சில பகுதிகளிலும் ஜிஎஸ்டி தின விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
ஜிஎஸ்டி சட்டம் அமலாக்கப்பட்டு ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது இந்திய மக்கள் ஆக்கப்பூர்வமான சீர்திருத்த நடவடிக்கைகளை எப்போதும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை இந்த உலகுக்கு உணர்த்தியுள்ளது. இதுபோன்ற வரி சீர்திருத்தங்களுக்கு வரவேற்பளித்துள்ள நம் மக்கள் பிற நாட்டவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் இணையவழி ரசீது (இ-வே பில்) நடைமுறை அமல்படுத்தப்பட்டதும் தடையில்லாத சரக்கு போக்குவரத்துக்குக்கு வழிவகுத்துள்ளது. மொத்தத்தில் புதிய வரி நடைமுறையானது நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏற்றுமதியாளர்கள், சிறு வர்த்தகர்கள், தொழில்முனைவோர், தொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் அதன் மூலமாக பயனடைந்து வருகின்றனர். அனைத்துக்கும் மேலாக விவசாயிகளுக்கும், சாமானிய நுகர்வோர்களுக்கும் ஜிஎஸ்டி சட்டம் நற்பயன்களை அளித்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையாகக் கருதப்படும் சரக்கு – சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) நடைமுறை நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜுன் 30-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதன் மூலம் ஏறத்தாழ 70 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்ட வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும், நடைமுறையில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.50 ஆயிரத்துக்கும் அதிக மதிப்புடைய பொருள்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு இ-வே பில் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றின் வாயிலாக வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் தடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.