Time: 3:33 PM

மன்னார்குடி- பட்டுக்கோட்டை இடையே புதிய மாற்றுப்பாதையில் ரயில் தண்டவாளம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

தஞ்சை, ஜூன் 30:  மன்னார்குடி- பட்டுக்கோட்டை இடையே புதிய மாற்றுப்பாதையில் தண்டவாளம் அமைக்க வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று  முன்தினம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார்.  கூட்டத்தில் அருமலைக்கோட்டை இயற்கை விவசாயி தங்கராசு பேசும்போது, குறுவை தொகுப்பு திட்டத்தில் இயற்கை விவசாயிகளுக்கு உண்டான திட்டங்கள் அறிவிக்கவில்லை. இயற்கை விவசாயிகள் தொலைநோக்கோடு தீங்கு செய்யாத விவசாயம் செய்து தங்கள் வளத்தை நலிவடைய விடுகின்றனர். அந்த வகையில் இயற்கை விவசாயியான நானும் நலிவடைந்துள்ளேன். இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் கலெக்டரிடம் பொன்னவராயன்கோட்டை விவசாயி வீரசேனன் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர். அதில் மன்னார்குடி- பட்டுக்கோட்டையை இணைக்கும் வகையில் அகல ரயில் பாதை அமைக்கப்படுமென 2011-12 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் நில எடுப்புக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நில அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2012ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பட்டுக்கோட்டை எம்எல்ஏவுடன் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரை சந்தித்தபோது நாங்கள் பரிந்துரைத்த மாற்றுப்பாதையில் ரயில்வே பாதை அமைக்க நில எடுப்பு செய்யப்படும் என்றார். மேலும் பொதுமக்கள் கருத்து கேட்ட பிறகே மன்னார்குடி- பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படுமென கூறினர். ஆனால் பழைய ஆய்வுப்படியே எங்கள் கிராமங்களில் நில எடுப்பு செய்வதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாக தெரிகிறது. கோயில், வீடுகள், வீட்டுமனைகள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், விவசாய நிலங்கள் ஆகியவை பாதிக்கப்படாமலும் ஆறு, சாலைகள் மீது புதிய மேம்பாலங்கள் கட்ட கூடுதலாக ஏற்படும் செலவினத்தொகை ரூ.50 கோடியை ரயில்வே துறை மிச்சப்படுத்தவும் புதிய மாற்றுப்பாதையில் புதிய ரயில் பாதை அமைத்து பட்டுக்கோட்டை- அதிராம்பட்டிணம் ரயில் பாதையை ஆய்வு செய்து பணி செய்ய தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு எங்களது மனுவை பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.