Time: 3:21 PM

ஒரே ஆண்டில் சாலை விபத்துக்களில் 16,157 பேர் பலி : விபத்து அபாய பகுதிகள்-5400

விபத்தில் தமிழகத்தில் நடப்பாண்டில் 16,157 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நெடுஞ்சாலைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5,324 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலை, 11,830 கி.மீ மாநில நெடுஞ்சாலை, 11,638 கி.மீ மாவட்ட முக்கிய ரோடுகளும், 34,858 கி.மீ தூர கிராம பகுதி ரோடுகள் என 63 ஆயிரத்து 650 கி.மீ. சாலைகள் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நெடுஞ்சாலை, உள்ளாட்சி ரோடுகளில் மாநில அளவில் தினமும் சுமார் 5,000 விபத்துகள் நடப்பதாகவும், 3500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைவதாகவும் தெரியவந்துள்ளது. சரக்கு, பயணிகள் வாகன பெருக்கம் நடப்பாண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் ரோடுகள் விரிவாக்கம், வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்ப அமையவில்லை. கடந்த 5 ஆண்டில் 32,928 கி.மீ தூர ரோடுகளை பராமரிக்க திட்டமிடப்பட்டது. இதில் 40 சதவீத ரோடுகளில் சீரமைப்பு பணி நடக்கவில்லை. புதிய ரோடு, பைபாஸ் அமைப்பது, நிலம் கையகப்படுத்துவது, ரோடுகளை தரம் உயர்த்துவது போன்ற பணிகள் நீண்ட காலமாய் இழுபறி நிலையில் இருக்கிறது. மாநில அளவில் நெடுஞ்சாலைத்துறையினர் நடத்திய ஆய்வில் 5,400 இடங்களில் விபத்து அபாயம் இருக்கும் ‘பிளாக் ஸ்பாட்’ ஆக கண்டறியப்பட்டது. இதில் 64 இடங்களில் அதிக முறை விபத்து நடந்திருப்பது தெரியவந்தது.

கடந்தாண்டில் 16,157 பேர் மாநில அளவில் உயிரிழந்துள்ளனர். மாதந்தோறும் 1300 முதல் 1360 பேர் வரை விபத்தில் இறப்பதாக தெரியவந்துள்ளது.  தினமும் நடக்கும் விபத்து உயிரிழப்பால் 61 கோடி ரூபாயும், காயம் மற்றும் சேதங்களால் தினமும் 131 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் தங்களது சாலை பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சாலை விபத்து உயிரிழப்பால் குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்படுவதும், அந்த குடும்பத்தை நம்பியிருப்பவர்கள் வருமானம் இன்றி வறுமையில் தவிப்பதும் வாடிக்கையாக உள்ளது என நெடுஞ்சாலை அறிவித்துள்ளது. சாலை பாதுகாப்பு, மேம்பாட்டு பணிகளை நடத்தினால் மட்டுமே விபத்துகளையும், விபத்தினால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளையும் தவிர்க்க முடியும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக இந்திய தொழில் நுட்ப கழகம், தேசிய தொழில் நுட்ப கழகம், அண்ணா பல்கலைகழகம் சார்பில் துறைசார் நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் விக்ரோட்ஸ் என்ற சாலை ஆணையத்துடன் தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தபடி, சாலை வழித்தட மேலாண்மை, சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை போன்றவற்றை ஆய்வு செய்து நடைமுறைக்கு கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 20 சதவீத விபத்துக்களை குறைக்கவும், பாலம், ரோடு, மலைப்பாதை, சுற்றுலா தல ரோடுகளை மேம்படுத்த புதிய திட்டம் தயாரிக்கவும் நெடுஞ்சாலைத்துறை தீவிரம் காட்டி வருகிறது.