Time: 5:43 PM

குற்றாலம் அருவியில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மரக்கட்டை விழுந்து – அக்காள்- தங்கை உள்பட 3 பெண்கள் படுகாயம்

தென்காசி, ஜூன் 18,

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் தொடங்கிய நாளில் இருந்து இடைஇடையே அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினமும் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மாலையில் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் வெள்ளம் குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் அங்கும் குளிக்க தொடங்கினர்.

நேற்று அதிகாலை முதலே குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பமாக கார், வேன், ஆட்டோக்களில் வந்து குற்றாலத்தில் குவிந்தனர். இதனால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

குற்றாலம், தென்காசி பகுதியில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் ஒழுங்கு செய்தனர். குற்றாலம் அனைத்து அருவிக்கரைகளிலும் ஆண், பெண் போலீசார் ஆங்காங்கே நின்று சுற்றுலா பயணிகளை கண்காணித்தனர். குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்து மாலை வரை லேசான வெயில் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது. இதனால் ரம்மியமான சூழல் நிலவியது.

இதற்கிடையே குற்றாலம் மெயின் அருவியில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் ஏராளமான பெண்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தண்ணீரில் அடித்து வரப்பட்ட பெரிய மரக்கட்டை ஒன்று அருவியில் விழுந்தது.

அங்கு குளித்துக்கொண்டிருந்த 3 பெண்கள் மீது பட்டது. இதை சற்றும் எதிர்பாராத பெண்கள், ஏதோ தலையில் விழுந்து விட்டதாக நினைத்து அபய குரல் எழுப்பினார்கள். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் மீது விழுந்த மரக்கட்டை மீண்டும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு அருவி தடாகத்தில் விழுந்தது. அதன்பிறகுதான் பெண்களின் தலையில் விழுந்தது மரக்கட்டை என்பது தெரிய வந்தது. தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மதுரை அழகர்கோவில் சர்வேயர் காலனியை சேர்ந்த செய்யது இப்ராகிம் மனைவி மும்தாஜ் (வயது 40), தென்காசி கீழப்புலியூர் காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் மகள்கள் தனலட்சுமி (16), கார்த்திகா (14) ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது. உடனே 3 பேரையும் போலீசார் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.