Time: 7:23 AM

தஞ்சை மாவட்டத்தில் 275 கிளைகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள் 2,900 பேர் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர்,

இந்தியா முழுவதும் வங்கித்துறையில் செயல்பட்டு வரும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை உள்ளடக்கிய 9 தொழிற்சங்கங்கள் இணைந்து 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. அதன்படி வேலை நிறுத்தப்போராட்டம் நேற்று தொடங்கியது. இந்த போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

1-11-2017 முதல் வழங்கப்பட வேண்டிய 11-வது இருதரப்பு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் எந்தவித அக்கறையும் காட்டாத மத்திய அரசையும், இந்திய வங்கிகள் நிர்வாகத்தையும் கண்டித்தும், பேச்சுவார்த்தையில் 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என்ற இந்திய வங்கி நிர்வாகத்தின் நிலையை கண்டித்தும் இந்த வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறுகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 275 வங்கிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 900 ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக வங்கிப்பணிகள் அடியோடு பாதிக்கப்பட்டன. வங்கிக்கு வந்த ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கோடிக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டன.

மேலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மண்டல செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

இதில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் அன்பழகன், இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் சொக்கலிங்கம், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க துணை மண்டல செயலாளர் ரவிச்சந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்க உதவி பொது செயலாளர் சத்யா, அதிகாரிகள் சங்க பொறுப்பாளர்கள் மோகனசுந்தரம், வீரமணி, லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர் சங்க செயலாளர் சாரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் 150 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.