Time: 6:58 AM

வங்கிகள் 2 நாள் வேலைநிறுத்தம்: அதிகாரிகள், ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

ஊதிய உயர்வு குறித்து டெல்லியில் நேற்று மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, நாளை திட்டமிட்டபடி 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளன.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப் பின் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் ஆகியோர் கூறியதாவது:

வங்கி ஊழியர்களுக்கு கடந்த 2017 நவம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு ஊதிய உயர்வு வழங்கப் படாமல் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, கடந்த மார்ச் 15-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்தது. ஆனால், வங்கித் துறையில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் காரணமாக இந்த வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்திய வங்கிகள் சங்கம் கடந்த 6-ம் தேதி மும்பையில் வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, 2 சதவீதம் அளவுக்கு மட்டுமே ஊதிய உயர்வு வழங்குவதாக இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்தது. கடைசியாக நடந்த 10-வது இருதரப்பு ஊதிய பேச்சுவார்த்தையின்போது 15 சதவீதம் ஊதிய உயர்வு வழங்குவதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்தது. இந்நிலையில், 2 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் மே 30 மற்றும் 31-ம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து அறிவித்தோம்.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள மத்திய அரசு தொழிலாளர் நலத்துறை தலைமை ஆணையர் சாகர் முன்னிலையில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இந்திய வங்கிகள் சங்கம் சார்பில் எஸ்.ஏ.கட்கர், மத்திய நிதித்துறை துணைச் செயலாளர் எஸ்.எச். மேகர் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இப்பிரச்சினையைத் தீர்க்க எவ்வித அரசு தரப்பில் எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனவே, திட்டமிட்டப்படி மே 30, 31-ம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும். நாடு முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்களும், தமிழகத்தில் 40 ஆயிரம் பேரும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர்.