Time: 6:32 AM

தனுஷ்கோடியில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் : பாம்பன் பாலம் அருகே ரயில் நிறுத்தம்

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பலத்த காற்றுடன் கொந்தளிப்பதால் பாம்பன், தனுஷ்கோடி தென்கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. சிக்னல் கிடைக்காததால் திருச்சி – ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயில் பாம்பன் பாலம் அருகில் நிறுத்தப்பட்டது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த காற்று வீசுவதோடு, கொந்தளிப்பாகவும் உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி மற்றும் பாம்பன் தென்கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது. தனுஷ்கோடி கரையோரத்தில் 20 அடி உயரத்திற்கு மேல், கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. கோடை விடுமுறை என்பதால் தனுஷ்கோடிக்கு அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

இவர்கள் கடலில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று காரணமாக நேற்று அதிகாலை திருச்சியிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்த பாசஞ்சர் ரயில், பகல் 12.15 மணியளவில் மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் புறப்பட்டபோது சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் பாம்பன் ரயில் பாலத்திற்கு முன் நடுவழியில் நிறுத்தப்பட்டது. காற்றின் வேகம் குறைந்ததும் 30 நிமிடம் தாமதமாக பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு பாம்பன் பாலத்தை கடந்து சென்றது.