Time: 6:18 AM

தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 150 பேருக்கு தேக்கு மரக்கன்றுகள் கலெக்டர் வழங்கினார்

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். மொத்தம் 216 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்த விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான சக்கர நாற்காலி ஒரு பயனாளிக்கும், 11 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளையும் கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறை சார்பில் எய்ட்ஸ் நோயினால் உயிரிழந்தோருக்கான அஞ்சலி தினம் மற்றும் தடுப்பு மருந்து விழிப்புணர்வு தினத்தையொட்டி உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் அந்த உறுதிமொழியை ஏற்று கொண்டனர்.

தஞ்சை மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்றுவதற்காக விவசாயிகள், பொதுமக்களுக்கு மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்களில் 150 பேருக்கு மாவட்ட வனத்துறை சார்பில் தேக்கு மரக்கன்றுகளை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை திட்ட இயக்குனர் பசுபதீஸ்வரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.