Time: 6:20 AM

அதிராம்பட்டினம் பகுதியில் தாழை இறால் விலை கடும் உயர்வு- ஏற்றுமதி மந்தம்

அதிராம்பட்டினம், பிப்.05

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடல் பகுதியில் இறால் மீன்களின் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. சமீப காலங்களாகவே அதிராம்பட்டினம் கடல்பகுதியில் சரிவர மழையில்லாததாலும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதால் கடலில் மீன் இனப்பெருக்கத்திற்கு காரணமாக உள்ள கடல் தாவரங்கள், பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் உள்ளிட்டவைகள் அழிந்துவிடுவதாலும் கடலில் மீன்வரத்து கடுமையாக குறைந்துள்ளது.இதனால் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் மட்டுமல்லாமல் கடல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுவரும் ஏராளமானவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே தஞ்சை மாவட்ட  கடல் பகுதியில் அலையாத்திக்காடுகள் உள்ளதால் இறால் உற்பத்தி மற்றும் நண்டு உற்பத்தி அதிகம் இருக்கும்.இதில் இறால்களில் ஒயிட் இறால், டைகர் இறால் எனப்படும் கருப்பு இறால், ப்ளவர் இறால் எனப்படும் தாழை இறால் என மூன்று வகை இறால்களும் அதிகம் கிடைக்கும்.மேலும் இங்குள்ள இறால்கள் உணவுக்கு ஏற்றவகையில் நல்ல ருசியாக இருக்கும் என்பதால் இப்பகுதியில் உள்ள இறால் மீன்களுக்கு அமெரிக்கா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில்  அதிக அளவில் தேவைகள் இருந்து வந்ததால் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் இறால் ஏற்றுமதியாளர்கள் முகாமிட்டு அதிக அளவில் ஏற்றுமதி  செய்துவந்தனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே கடல் பகுதியில் இறால்களின் வரத்து குறைந்துவிட்டதால் இறால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. இதுபற்றி மீனவர்கள் கூறுகையில் இறால் வகைகளில் ஒயிட் இறால் எனப்படும் வெள்ளை இறாலைத் தான் வியாபாரிகள் முதல் ரகமாக வைத்து  அதாவது ஒரு இறால் குறைந்தது 20 கிராமிலிருந்து 25 கிராம் வரை உள்ள சைஸ்களை முன்பெல்லாம் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 500 வீதம் வாங்குவார்கள்.மற்ற இறால்களுக்கு வெள்ளை இறாலை விட குறைந்த விலைக்குத்தான் வாங்குவார்கள்.இந்நிலையில் தற்போது வெள்ளை இறால்கள் வரத்தே இல்லாததால் தற்போது குறைந்த அளவே வரத்தில் இருக்கும் வெள்ளை இறால்களுக்கு அடுத்த ரகமாக இருக்கும் கருப்பு மற்றும் தாழை இறால்களுக்கே கிலோ ஒன்றுக்கு ரூபாய் 650 வரை விலை நிர்ணயம் செய்து வாங்கும் நிலை உள்ளது. இறால்களின் வரத்து குறைவடைந்துள்ளதால் நாங்கள் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முன்பு கொடுகட்டிப்பறந்த இறால் ஏற்றுமதியும் தற்போது மந்தமான நிலையில் உள்ளது என்கின்றனர்.

Comments are closed.