Time: 2:11 PM

கொசு விரட்டியாக பயன்படுத்த கொள்ளிடம் நர்சரியில் 20 ஆயிரம் நொச்சி செடி கன்றுகள் தயார்

கொள்ளிடம்: கொசு விரட்டியாக வீடுகளை சுற்றி நட்டு பராமரிக்கும் வகையில், 20 ஆயிரம் நொச்சி செடி கன்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளதை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் புதியதாக நர்சரி கார்டன் தோட்டம் அமைத்து 20 ஆயிரம் நொச்சி செடி கன்றுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று முடிவுற்றது. இந்த நொச்சி கன்றுகளை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அருள்சேகரன் (தணிக்கை), ஒன்றிய ஆணையர் நக்கீரன், பிடிஓ முருசேகன், ஒன்றிய பொறியாளர் தாரா ஆகியோர்  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் ஆணையர் நக்கீரன் இது குறித்து கூறுகையில், புதியதாக நர்சரி கார்டன் அமைக்கப்பட்டு, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் நொச்சி செடி கன்றுகள் தயார் செய்யும் பணி முடிவுற்றுள்ளது. பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. இதற்கு ரூ.11 லட்சம்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல்வேறு மருத்துவக்குணம் கொண்ட இந்த நொச்சி செடி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கொசுக்கள் மற்றும் விஷப்பூச்சிகளை தடுக்கிறது.

வருடக்கணக்கில் இருப்பு வைத்துள்ள உணவு தானியங்களில் நொச்சி இலையை போட்டு பாதுகாத்து  வைப்பதன் மூலம் உணவு தானியங்களில் பூச்சிகள் அண்டாது. இது சளி மற்றும் ஆஸ்துமா ஆகிய நோய்களுக்கும் முக்கிய நிவாரணியாக இருந்து வருகிறது. இந்த செடிகள் முதல் கட்டமாக பிரதம மந்திரியின் திட்டத்தில் வீடுகட்டி கொள்ளும் பயனாளிகளுக்கு மற்றும் பசுமை வீடுகள் கட்டி கொள்ளும் பயனாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. நொச்சி செடி கன்றுகள் தேவைப்படுவோர் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.