Time: 3:01 PM

ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் டிடிவி தினகரன்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்றுக் கொண்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் மாபெரும் வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் அந்த தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டிய தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

டி.டி.வி.தினகரனுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பதவியேற்ற டி.டி.வி.தினகரனுக்கு சபாநாயகர் தனபால் வாழ்த்து தெரிவித்தார். சபாநாயகர் தனபால் முன்னிலையில் தினகரன் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, பழனியப்பன்,சோளிங்கர் பார்த்திபன், மானாமதுரை மாரியப்பன் கென்னடி, பரமக்குடி டாக்டர் முத்தையா, தஞ்சை ரங்கசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

டிடிவி தினகரன் பேட்டி
சின்னமும், கட்சியும் மட்டும் இருந்தால் போதாது, தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்களே உண்மையான அதிமுக என சுயேட்சை எம்.எல்.ஏ. தினகரன் தெரிவித்துள்ளார். ஆட்சியாளர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அவர் ஜோறியுள்ளார். ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்துவிட்டு யாருக்கோ ஆட்சியாளர்கள் கைகட்டி ஏவல் செய்வதாக தினகரன் விமர்சித்துள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களே நிர்வாகிகளை நீக்குகிறார்கள் என்றும் நிர்வாகிகள் நீக்கத்தை பார்த்து மக்கள் கை தட்டி சிரிக்கிறார்கள் என்றும் அவர் சாடியுள்ளார். டோக்கன் கொடுப்பவர்களை நம்பி ஒட்டு போடுவதற்கு மக்கள் ஏமாளி கிடையாது என தினகரன் தெரிவித்துள்ளார்.

3 மாதத்திற்குள் ஆட்சி, அதிகாரங்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிடும் என்றும் மனதளவில் பல அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் எங்களுடன் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். 5 அல்லது 6 பேரின் சுயநலமே இவ்வளவு பிரச்சினைக்கு காரணம் என்றும் சிலர் வழிவிட்டால் ஆட்சியை தக்க வைக்க முடியும் எனவும் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சட்டமன்ற வாக்கெடுப்பின் போது எங்கள் ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள் என்றும் ஜன.20க்குள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரும் என்று தினகரன் கூறியுள்ளார்.

Comments are closed.