Time: 8:07 PM

முத்துப்பேட்டையில் நரிக்குறவர் மீது பூஜை பொருட்கள் திருடியதாக பொய் புகார் உறவினர் தூண்டுதலால் போலீசார் கெடுபிடி கலெக்ரிடம் மனு

முத்துப்பேட்டை, டிச.26:  திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தெற்குக்காட்டை  சேர்ந்தவர் சூர்யா(38). நரிக்குறவர். இவர் வயல்களில் எலிக்கிட்டி நடுவது, திருவிழாகளில் கடை போடுவது என பிழைப்பு நடத்தி வருகிறார். இவரிடமிருந்த பழமையான பல லட்சம் மதிப்புள்ள காளியாத்தா வெள்ளிசிலை, விலைமதிக்க முடியாத பரம்பரை பட்டுதுணி மற்றும் பூஜை துணிமணிகள், பூஜைசாமான்களை சில மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் ராஜா திருடிச்சென்று விட்டார். மேலும் முன்விரோதம் காரணமாக சூர்யா வீட்டில் உறவினர் ராஜா வெங்காய வெடிகளை புதைத்து வைத்ததாகவும் தெரிகிறது.

இதனையறிந்த சூர்யா நரிகுறவர்கள் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கேட்டு சிலையையும் மீட்டுத்தர வலியுறுத்தினார். ஆனாலும் ராஜா வெள்ளிசிலை மற்றும் பொருட்களை சூர்யாவிடம் தரவில்லை. இதனையடுத்து போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கையில்லாத நிலையில் கடந்த மாதம் வீடு தேடி வந்த வேதாரண்யம் போலீசார் சூர்யாவை விசாரணை என்று கூறி அழைத்து சென்றுள்ளனர். அங்கு திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் இருநாட்கள் சூர்யாவைஅடைத்து வைத்து துன்புறுத்தியுள்ளனர்.

இதையடுத்து தனது கணவரை உடனடியாக விடுவிக்காவிடில் குழந்தைகளோடு போலீஸ் ஸ்டேசன் வாசலில் தீக்குளிக்க போவதாக அவருடைய மனைவி மிரட்டியதை தொடர்ந்து போலீசார் சூர்யாவை விடுவித்தனர். இந்நிலையில்  சிலையை திருட்டு கொடுத்து விட்டு பரிதவிக்கும் என்னை போலீசார்  திருட்டு வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். அதே போல் உறவினர் ராஜா மூலம் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது.  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க   கலெக்டருக்கு  அனுப்பி உள்ள மனுவில் சூர்யா தெரிவித்துள்ளார்.

Comments are closed.