Time: 11:31 PM

வாக்குசாவடி மையங்களுக்கு குலுக்கல் முறையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நாளை ஒதுக்கீடு

சென்னை: வாக்குசாவடி மையங்களுக்கு குலுக்கல் முறையில் ஓட்டு பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நாளை நடைபெறுகிறது.
ஆர்.கே.நகர் இடைதேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலுக்கு 360 கட்டுப்பாட்டு கருவிகள், 360 ஒப்புகைச் சீட்டு வழங்கும் வி.வி.பி.ஏ.டி இயந்திரங்கள், 1300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்றவை கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் புளியந்தோப்பு டீகாஸ்டர் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணியை மத்திய அரசின் பெல் நிறுவன அதிகாரிகள் மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, வாக்குபதிவு இயந்திரத்தை வாக்குசாவடிகளுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்குவதற்கான நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, 256 வாக்குசாவடி மையங்களுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நாளை ஒதுக்க உள்ளனர். இதை தொடர்ந்து, வாக்குபதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் பெயர், சின்னங்கள் அச்சடித்து ஒட்டப்படும். அதன் பிறகு, வாக்குபதிவு மையங்களுக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய நாள் அனுப்பி வைக்கப்படும். எனவே, இப்பணிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Comments are closed.