Time: 10:01 AM

அதிராம்பட்டினத்தில் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

அதிராம்பட்டினம், நவ. 20

 

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அதிராம்பட்டினம் பேரூராட்சிப்பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் பட்டுக்கோட்டை  செல்லும் மெயின் ரோட்டில் பழஞ்செட்டித்தெரு பஸ் நிறுத்தம், சேர்மன்வாடி மற்றும் வண்டிப்பேட்டை வரையிலும் கிழக்குக்கடற்கரைச்சாலையில்  முத்துப்பேட்டை ரோடு கருங்குளம், வள்ளிகொல்லைக்காடு, மாரியம்மன் கோவில் ஆர்ச் முதல் காலேஜ் முக்கம்,ரயில்வே கேட்,ஏரிக்கரை பஸ் நிறுத்தம் ,இராஜாமடம், கொல்லுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் வரை தொடர்ச்சியாக ஆங்காங்கே  மாலை நேரங்களில்  மாடுகள் சாலைகளில்  அங்கும்இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.சில நேரங்களில் மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொண்டு  சாலையின் குறுக்கே திடீரென பாய்வதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது மோதுவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்ந்தவண்ணம் உள்ளது.

இது தவிர மாடுகள் சாலையின் நடுவே நிற்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையின் ஓரங்களில் செல்லமுற்படும்போது சாலையை ஒட்டி உள்ள மணலில் சறுக்கி கீழே விழும் நிலையும் உருவாகிவிடுகிறது.மேலும் இரவு நேரங்களில் கிழக்குக்கடற்கரைச்சாலையில் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படும் நிலையில் வெள்ளை நிற மாடுகளைத்தவிர கருப்பு மற்றும் செம்பழுப்பு நிற வண்ணங்கள் கொண்ட மாடுகள் சாலையின் குறுக்கே படுத்துக்கிடப்பது சட்டென தெரியாமல் போகவே அருகில் வந்தவுடன் மாடுகள் படுத்திருப்பது கண்டு வாகனத்தின் டிரைவர் திடீரென கட் அடிக்க முற்படும்போது வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நாகப்பட்டினத்திலிருந்து  பால் ஏற்றிவந்த டெம்போ வேன் மல்லிப்பட்டினம் வந்துவிட்டு திரும்பும்போது சுமார் 1 கிலோ மீட்டர் துரத்தில் திடீரென இரண்டு மாடுகள் சாலையின் குறுக்கே வந்ததில் திடீரென டெம்போவின் வேகத்தை கட்டுப்படுத்தமடியாமல் டிரைவர் செந்தில் தடுமாறிய நிலையில் டெம்போ  தலைகுப்புற கவிழ்ந்தது.இதில் டிரைவர் செந்தில் மற்றும் க்ளீனர் சசி பலத்த காயமடைந்தனர்.

மேலும் டெம்போ மோதியதில் இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்தன.இதே போல கடந்த 1 மாதத்திற்கு முன்  புதுக்கோட்டை உள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில்  சமையல் வேலை பார்த்துவந்த கணேசன் வயது 48  வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார்சைக்கிளில்  இரவு 8 மணியளவில் தம்பிக்கோட்டை மேலக்காட்டில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது கிழக்குக்கடற்கரைச்சாலை வள்ளிகொல்லைக்காடு பஸ்நிறுத்தம் அருகில் திடீரென மாடு ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால் அந்த மாடு மீது பைக் மோதி கீழே விழுந்து பலத்தகாயமடைந்த நிலையில் அதிராம்பட்டினம் காவல்துறையினர் அவரை உடனடியாக தக்க நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றதால் உயிர்பிழைத்தார்.

இதுபோன்று அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுவரும் நிலையில் விபத்துக்களுக்கு காரணமாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது பொதுமக்களையும் வேதனையடையச்செய்துள்ளது.

மாடுகள் வளர்ப்போர் அதை சரிவர தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாததால்     மாலை நேரங்களில் பழக்கடைகள், மளிகைக்கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்டவைகளிலிருந்து கொட்டப்படும் கழிவுகளை உண்பதற்காக தினந்தோறும் சரியாக சொல்லிவைத்தாற்போல் ஒவ்வாரு வணிக வளாகம் உள்ள இடங்களிலும் சுமார் 15 மாடுகள் வீதம் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மாடுகள் சுற்றித்திரிவது தொடர்கதையாகிவருகிறது.எனவே விபத்துக்களை தடுக்க மாடுகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்கத்தவறும் மாடுகள் வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Comments are closed.