Time: 7:26 PM

முத்துப்பேட்டை அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி அகற்றிவிட்டு புதிதாக கட்ட மக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை, நவ.3:  முத்துப்பேட்டை அருகே முற்றிலும் சேதமாகி எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து உயிர் பலியை ஏற்படுத்தும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முத்துப்பேட்டை அடுத்த கருவேப்பஞ்சேரி ஊராட்சி அலுவலக வளாகத்தில் ஊராட்சிக்குட்பட்ட அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இதன் மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்தநிலையில் 2000 ஆண்டில் கட்டப்பட்ட இந்த குடிநீர் தொட்டி பழுதடைந்தும், மீண்டும் 2007ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கப்பட்டது.

ஆனால் மீண்டும் பொலிவு இழந்து காணப்படுகிறது. தற்போது பொதுமக்களின் பயனில் இருந்தாலும் அதன் தாங்கு பில்லர்கள் மற்றும் சிமென்ட் பெல்ட் இணைப்புகளில் சிமென்ட் காரை பெயர்ந்து உதிர்ந்துள்ளன. உள்ளிருக்கும் இரும்பு கம்பிகளும் துருப்பிடித்தபடி உள்ளன. இதனால் தொட்டியின் ஸ்திரதன்மை கேள்விக்குறியாகி பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.

மேலும் இந்த குடிநீர் தொட்டி அருகே ஊராட்சி அலுவலகம் மற்றும் விஏஓ அலுவலகம், அரசு பொது நூலகம் ஆகியவையும் உள்ளன. இந்த கட்டிடங்களும் சேதமடைந்த நிலையில்தான் உள்ளது.  இந்த அலுவலகங்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு சான்றுகளுக்காக வந்து செல்கின்றனர். அதேபோல் இந்த குடிநீர் தொட்டியை ஒட்டி முத்துப்பேட்டை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையும் கடந்து செல்கிறது. இதில் கனரக வாகனங்கள் செல்லும்போது குடிநீர் தொட்டி அதிர்வு ஏற்பட்டு ஆட்டம் காணுகிறது.

அதேபோல் இதனையொட்டி பஸ் நிறுத்தமும் உள்ளதால் எந்தநேரமும் பயணிகள் இப்பகுதியில் பஸ்சிற்காக காத்து நிற்கின்றனர். அதேபோல்  அப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த குடிநீர் தொட்டியின் ஆபத்தை உணராமல்  இதன் அருகே அமர்ந்து ஓய்வு எடுப்பதுடன், அப்பகுதி சிறுவர்கள் விளையாடும் பகுதியாகவும் உள்ளது. அதனால் இந்த குடிநீர் தொட்டி எந்த பக்கம் சாய்ந்து இடிந்து விழுந்தாலும்  ஏராளமான உயிர் பலிகளும் அதிகரிக்கும். அதேபோல் சாலை பகுதியில் விழுந்தால் கோரவிபதுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

ஆகையால் இந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ.. ஒன்றிய நிர்வாகமோ.. யாரும் கண்டுக்கொள்ளவில்லை.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கஜபதி கூறுகையில், இங்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த குடிநீர் தொட்டி தற்போது தாங்கு பில்லர்கள் சேதமடைந்து  எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஊராட்சி அலுவலகம், விஏஓ அலுவலகம் மற்றும் பேருந்து நிறுத்தத்திற்கும் வருபவர்கள் தங்களது உயிரை பிடித்துக்கொண்டுதான் வந்து செல்கின்றனர்.

இதுகுறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு போர்க்கால நடவடிக்கை எடுத்து உடனடியாக குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு இப்பகுதி மக்களுக்காக புதிய குடிநீர் தொட்டி அமைத்து தரவேண்டும் என்றார். இந்த குடிநீர் தொட்டி அருகே ஊராட்சி அலுவலகம் மற்றும் விஏஓ அலுவலகம், அரசு  பொது நூலகம் ஆகியவையும் உள்ளன. இந்த கட்டிடங்களும் சேதமடைந்த நிலையில்தான் உள்ளது.

Comments are closed.